Friday 18 March 2016

29.கஞ்சன் வலைவைத்த வன்று

29.கஞ்சன் வலைவைத்த வன்று 
பாடல் :29
கஞ்சன் வலைவைத்த வன்று
காரிரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
நின்றஇக் கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட
மசிமையி லீ!கூறை தாராய்

விளக்கம் :
கஞ்சன் வலை வைத்த அன்று - கஞ்சன் என்ற உன் மாமன் வைத்த வலையில் அன்று
கார் இருள் எல்லில் பிழைத்து -  அடர்ந்த கருமையான இருளில் தப்பித்து
நின்ற இக்கன்னியரோமை -நீரில் நின்ற இந்தக் கன்னியர்களை
நெஞ்சம் துக்கம் செய்யப் போந்தாய் - எங்கள் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்யவா வந்தாய்
ஆணாட விட்டிட்டு இருக்கும் - ஆண் பிள்ளை தானே என விட்டுவிட்டு
அஞ்ச உரப்பாள் அசோதை - உன்னை பயப்படும்படி அதட்ட மாட்டாள் உன் தாய் அசோதை
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட - உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியிடம் பால் உண்ட
மசிமைஇலீ !கூறை தாராய் - பெருமை இல்லாதவனே   எங்கள் உடையைத் தா

உன் மாமன் கஞ்சன் உன்னைக் கொல்வதற்காக வைத்த வலையில் இருந்து , அடர்ந்த கார் இருளில் நள்ளிரவில் தப்பித்து வந்தியே , அது இப்படி நீரில் நின்ற இந்தக் கன்னியர்களின் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்வதற்காகவா வந்தாய்?
கார் இருள் எல் - எல் என்பது கதிரவன் /கதிரவன் மறைவு /இருள் இரண்டையும் குறிக்கும் எதிர்மறை ஒரு மொழி #தமிழ்டா ன்னு காலரைத் தூக்கி விட்டுக்குவோம்

ஆண்பிள்ளை தானே ,என்ன போச்சு இப்பன்னு உங்கம்மா அசோதையும் நீ பயப்படும்படி எதுவும் சொல்றதில்லை.பேருக்கு எங்க முன்னாடி கண்டிக்கிற மாதிரி இருந்தாலும் அது உண்மை இல்லன்னே தோனுது .நீ அச்சப்படி அவ கண்டிச்சா நீ ஏன் இப்படி இருக்கப் போற ?இதை எல்லாம் சொல்றப்ப கொஞ்சம் குமட்டுல இடிச்சுட்டு சொல்ற மாதிரி கற்பனை பண்ணிப் பாருங்க..ஒரு மாமியார் மருமகள் ஊடல் தெரியும் :)

உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியை இனம் கண்டுகொண்டு அவளிடம் பால் குடித்தே அவளைக் கொன்றவனே !


மசிமை -மஹிமை - பெருமை  இலி - இல்லாத மசிமை இலி -பெருமை இல்லாதவனே ..எங்கள் உடைகளைத் தருவாயாக ! (பெண்களின் உடைகளைத் திருடியவனுக்கு என்ன பெருமை இருக்கப் போகிறது )
கோதையின் பாடல்களில் எல்லாம் ஓர் யதார்த்தம் இருக்கும்.நம்மைப் போன்ற மனிதர்களின் பேச்சுமொழி இருக்கும்.அதனால் அதீத இலக்கியம் என்று அந்நியப்பட்டுப் போகாம இந்தப் பாடல்கள் மனதிற்கு நெருக்கமாகின்றன :)


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!